கர்நாடகாவில் வறட்சியால் தவிக்கும் கிராமங்களுக்கு தனிநபராய் ஒருவர் தேடி சென்று உதவி!
கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நிலவுகின்ற மாபெரும் பிரச்சினைக்கு தனியொரு நபர் தாமாக முன்வந்து தீர்வளித்து வருகிறார்.
இந்த மாவட்டத்தின் பெரும் பகுதியைச் சுற்றி வனப் பகுதிகள் உள்ளன. இருந்தபோதிலும் இங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் ராஜு மஸ்டிஹல்லா என்ற சமூக ஆர்வலர், துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ முன்வந்தார். இவர் தன் வீட்டுக் கிணற்றில் உள்ள தண்ணீரை, வாகனத்தில் ஒரு டேங்க் வைத்து நிரப்பிக் கொண்டு ஒவ்வொரு கிராமமாக சென்று வருகிறார்.
உத்தர கன்னட மாவட்டத்தின் கப்பார்கி, யடாதோர், அனகண்டி போன்ற இடங்களில் ராஜு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். ராஜுவுக்கு 35 வயது ஆகிறது. கொஞ்சம் விவசாய நிலமும், மாடுகளைக் கொண்டு பால் உற்பத்தியும் செய்து வருகிறார்.
வருமானம் குறைவான அளவில் இருக்கின்றபோதிலும், குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் எண்ணத்தை இவர் கைவிடவில்லை. தினசரி சுமார் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை விநியோகம் செய்து வருகிறார். ஆழ்துளை கிணறுகள் இல்லாத பகுதிகள், நேரடி குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் இவரது சேவை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.சுற்று வட்டார கிராம மக்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், தனிநபர் நடத்துகின்ற திருமண விழாக்களுக்கும் ராஜு உதவி செய்து வருகிறார். எவ்வளவு தூரம் என்றாலும், பயணிப்பதற்கு சிக்கலான தூரம் என்றாலும் இவர்களது தண்ணீர் வாகனம் சரியான நேரத்திற்கு சென்று உதவிக்கரம் நீட்டிவிடும்.
ராஜு வைத்துள்ள தண்ணீர் டேங்கின் கொள்ளளவு 2 ஆயிரம் லிட்டர் ஆகும். 20 நாட்களில் சுமார் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இவர் விநியோகம் செய்துள்ளார். இத்தனைக்கும் இவர் யாரிடமும் கட்டணம் பெறுவதில்லையாம்.
கோடைக் காலத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும்போது திடீரென தாகம் எடுத்தால் நாக்கு வறட்சி ஏற்பட்டு நாம் தண்ணீரை தேடும் நிலை ஏற்படும். அதே சமயம், ஒட்டுமொத்தமாக சில கிராமங்களே குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் ராஜுவின் குணாதிசயத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.