மீன்பிடித் தடைகாலம் நிறைவு – கன்னியாகுமரி, ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு முடிந்து ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்ல இருந்தனர். இந்நிலையில் மன்னர் வளைகுடா பகுதியில் வானிலை மாற்றம் காரணமாக அதிக காற்று வீசக்கூடும் என்பதால் மேலும் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கிட்டு, இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை பழுது பார்த்ததோடு, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் சீரமைத்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் தொழிலுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை காசிமேட்டில், மீனவர்கள் தங்களது விசை படகிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு கடலுக்குள் சென்றனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காகச் சென்றனர். மீன்பிடிக்க தேவையான வலை, ஜஸ் கட்டிகளுடன் மீனவர்கள் புறப்பட்டனர். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு டீசல் மானியத்தை முழுமையாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். விசைப் படகுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரும் சனிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்ல உள்ளனர்.
வானிலை அறிவிப்பின்படி, 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமான மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களது படகுகளை கரைகளில் நிறுத்திவைத்துள்ள அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
புதுச்சேரியில் தேங்காய்திட்டு துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் புறப்பட்டனர். அவர்களை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து அனுப்பிவைத்தார். முன்னதாக யாகசாலை அமைத்து விசேஷ பூஜைகள் செய்த மீனவர்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கடலில் ஊற்றியும், மலர் தூவியும் வழிபட்டனர்.