பெட்ரோல் குண்டு வீசி மத்திய அமைச்சர் வீட்டிற்கு தீவைப்பு…!
மணிப்பூரில் பழங்குடியின இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை கலவரம் கடந்த ஒரு மாத காலமாக ஓயாமல் தொடர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மெய்தி சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியின பிரிவில் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து குக்கி சமூக மக்கள் நடத்திய போராட்டம் இரு தரப்புக்கும் இடையே பெரும் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில் சில முன்னணி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ஏற்கனவே சூறையாடப்பட்ட நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீடு நேற்று வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டு சூரையாடப்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கோங்பாவில் உள்ள அமைச்சர் ராஜ்குமார் வீட்டில் நேற்று இரவு 10 மணி அளவில் புகுந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்து சென்றன.
இந்த சம்பவத்தில் அமைச்சரின் வீடு, வாகனங்கள் கடும் சேதமடைந்தனர். சம்பவத்தின் போது அமைச்சர் ஊரில் இல்லை. அலுவல் பணிக்காக அவர் கேரளா சென்றுள்ள நிலையில் இது தொடர்பாக நியூஸ் 18க்கு அவர் பேட்டியில் கூறியதாவது, “நான் அலுவல் பணியாக கொல்கத்தாவுக்கு சென்று அங்கிருந்து கொச்சிக்கு வந்துள்ளேன். எனது வீடுக்கு தீவைக்கப்பட்ட தகவல் கிடைத்தது. இதன் காரணம் ஏன் என்று தெரியவில்லை.
நான் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், சிலருக்கு அமைதி ஏற்பட விருப்பமில்லை. இயல்பான சூழலை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். அமைதி தான் ஒரே தீர்வு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தாக்குதலில் எனது வீட்டில் இருந்த யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் தருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.