ஆந்திராவில் ரூ.50 கோடி கேட்டு எம்பியின் மனைவி, மகன் கடத்தல்…!

ஆந்திர மாநிலத்தில் எம்பியின் குடும்பத்தினரை கடத்தி 50 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், ஒரு மணி நேரத்தில் அவர்களை காவல்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரான சத்யநாராயணா, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பியாக உள்ளார். இவர் ஐதராபாத்திற்கு சென்றிருந்த நிலையில், விசாகப்பட்டினம் ருசி கொண்டாவில் உள்ள அவரது வீட்டுக்குள் 4 பேர் புகுந்தனர். அவர்கள், வீட்டில் இருந்த சத்யநாராயணாவின் மனைவி ஜோதியை மிரட்டி, ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவை வரவழைத்தனர்.
பின்னர், ஜோதி அவரது மகன் மற்றும் ஆடிட்டரை அங்கிருந்து காரில் கடத்திச் சென்ற கும்பல், சத்யநாராயணாவுக்கு செல்போனில் அழைத்து, 50 கோடி ரூபாய் கொடுத்தால் தான் 3 பேரையும் விடுவிப்போம் என மிரட்டியுள்ளது.
இதனால் பதறிப்போன எம்பி சத்யநாராயணா, விசாகப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து. அழைப்பு வந்த செல்போனின் சிக்னலை வைத்து இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
காவலர்களை பின் தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல், 3 பேரையும் இறக்கிவிட்டுவிட்டு தப்பியது. விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடி ஹேமந்த் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.