ஆஷஸ் தொடர்- முதல்நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது. இந்நிலையில் தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி – பென் டக்கெட் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தையே சாக் கிராலி பவுண்டரிக்கு விளாசினார். ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை விரட்டினர். இதனால் 3 ஓவரில் 18 ரன்கள் எடுத்தது. 4-வது ஹசில்வுட் பந்து வீச்சில் பென் டக்கெட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சாக் கிராலியுடன் ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக் கிராலி அரை சதம் அடித்து அசத்தினர். உணவு இடைவேளையின் கடைசி ஓவரின் 4-வது பந்தில் கிராலி 61 ரன்னில் பொலண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல்நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட், பொலண்ட், நாதன் லயன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.