கலாசார அமைச்சரை பதவியை விட்டு அகற்றுமாறு வடக்கிலிருந்து அழுத்தம்.

தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரித்த கலாசார அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ் அரசியல் கட்சியொன்று ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
“வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் மற்றும் விவசாயம் செய்யும் மக்களது காணிகள், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் உத்தரவின் பேரில் தொல்பொருள் என்ற பெயரில் சுவீகரிக்கப்படுகின்றன” என இலங்கை தமிழ் அரசு கச்சி ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள தமிழ் அரசு கச்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி சுமந்திரன், புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விக்கிரமநாயக்க பாதுகாப்பு படையினருடன் சென்று தமிழர்களின் காணிகளை அபகரிக்க தொல்லியல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் அரசு கட்சி என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான உரையாடலின் போது, தொல்பொருள் ஆணையாளர் மனதுங்க அமைச்சரவை தீர்மானங்களுக்கு இணங்கவில்லை எனத் தோன்றியது. தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ”
அமைச்சரவையில் நெருக்கடிகள் இருக்கலாம், ஆனால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை ஏற்படுத்தியமைக்கு காரணமான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ”
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் குருந்தூர் மலை தொல்லியல் பகுதிக்கு இராணுவத்தினரை அழைத்துச் சென்று புதிய ஆலயம் ஒன்றைக் கட்டுவதற்கு முன்முயற்சி எடுத்தவர் விதுர விக்கிரமநாயக்கவே என அவர் தெரிவித்தார்.