இலங்கையில் ஆங்கிலம் தேசிய மொழியாக உயர்த்தப்படும் : சீன , ஜப்பான் , இந்தி , அரபு உப மொழிகளாகும்- ஜனாதிபதி
அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர்களையும் உட்கட்டமைப்புகளையும் ஏற்படுத்தித் தருவதுடன், ஆங்கில மொழியை தேசிய மொழியாக முன்னோக்கி கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆங்கிலத்துடன் மட்டுப்படுத்தப்படாமல் , சீன மொழி, ஜப்பான் மொழி போன்ற மொழிகளுடன் , இந்தி மற்றும் அரபு போன்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்க உள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
2018-2022 கல்வியாண்டுக்கான ஆசிரியர் நியமனங்களை தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு வழங்கும் தேசிய வைபவம் , இன்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வித்யாபீட கருத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கு 1729 ஆசிரியர் நியமனங்களும் , மேல் மாகாணத்திற்கு 626 நியமனங்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை, ஏனைய 08 மாகாணங்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டதோடு, அதன்படி இன்று நியமனம் பெற்ற கல்வி விஞ்ஞான டிப்ளோமாதாரிகளின் எண்ணிக்கை 7,342 ஆகும்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 2050 ஆம் ஆண்டிற்கு அப்பால் நாட்டில் கல்வி முறைமையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்தார். இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மனித வளமே பிரதான காரணி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த மனித வளத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வீடியோ:-