யாழ்ப்பாணத்தில் ஓட்டோக்களுக்கான கட்டண மீற்றர் பொருத்துவதில் தாமதம்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஓட்டோக்களுக்குக் கட்டண மீற்றர் பொருத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஓட்டோக்களுக்குப் பொருத்திய கட்டண மீற்றருக்குரிய தவணைப் பணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என்பதால் புதிய கட்டண மீற்றர்கள் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஓட்டோக்களுக்குக் கட்டண மீற்றர் பொருத்தப்பட்டது. கட்டண மீற்றருக்கான பணம் தவணை முறையில் செலுத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டண மீற்றர் பொருத்திய பல ஓட்டோக்களுக்களின் சாரதிகளை தவணைப் பணத்தைச் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் பொருத்திய கட்டண மீற்றர் கருவி தானியங்கியாக செயழிலக்கச் செய்யப்பட்டுள்ளது. பணத்தைச் செலுத்தி முடித்தாலே அவை மீள இயங்கும்.
தவணைக் கட்டணம் செலுத்தாத நிலையில் அதற்குரிய வட்டியும் அதிகரித்துள்ளது. வட்டியை முழுமையாக நீக்கினால் தவணைப் பணத்தைச் செலுத்த முடியும் என்றும் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்து தருமாறும் யாழ். மாவட்ட ஓட்டோ உரிமையாளர் சங்கத்தால் யாழ். மாவட்ட செயலருக்கு மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.
“வட்டியை விலக்களித்து தருமாறு ஓட்டோ உரிமையாளர்கள் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை பரிந்துரைத்து கட்டண மீற்றர் பொருத்திய நிறுவனத்துக்கு அனுப்பவுள்ளோம்” – என்று யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
தவணைக்குரிய வட்டிப் பணத்தை 3 தவணைகளில் செலுத்தி முடித்தால் 25 சதவீத கழிவையும், ஒரே தடவையில் செலுத்தினால் 50 சதவீதக் கழிவையும் வழங்கத் தயாராகவுள்ளதாக மேற்படி நிறுவனப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கட்டண மீற்றர் பொருத்தாத பல ஓட்டோக்கள் யாழ். மாவட்டத்தில் உள்ளன. அவையும் எதிர்காலத்தில் கட்டண மீற்றர் பொருத்தவுள்ளமையைக் குறிப்பிட்டு வட்டியை முழுமையாக விலக்களிக்க கோருவதற்கு யாழ். மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது.