சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி வழங்கிவைப்பு.
மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 30 இலட்சம் ரூபா கடன் வசதி வழங்கிவைப்பு
மட்டக்களப்பில் சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு வரும் முயற்சியாளர்களுக்கு சுயசக்தி கடன் திட்டத்தின்கீழ் தொழில் விருத்தியினை மேற்கொள்வதற்காக 30 இலட்சம் ரூபா பெறுமதியான காசேலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் 10.09.2020மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் செயற்பட்டு வருகின்ற சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலில் சிறுதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற உற்பத்தியாளர்களின் தொழில் விருத்தியினை மேம்படுத்தும் நோக்குடன் நிதி மற்றும் துணைச் சேவைப்பிரிவு இவர்களுக்கான கடன் வசதியினைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.
நாட்டின் பொறுளாதாரத்தினை மேம்படுத்தும் அரசின் திட்டத்திற்கமைய சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இக்கடன் வசதிகளை வங்கிகள் மூலம் 5.5 வீத வட்டியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இம்மாவட்டத்தில் தையல் தொழில், அரிசி மா உற்பத்தி, சீமெந்து மற்றும் செங்கல் உற்பத்தி, மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் மற்றும் மிக்சர் உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுபட்டுவரும் 12 தொழில் முயற்சியாளர்களுக்கு ஹட்டன் நெசனல் வங்கியினால் தலா 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா கடன் வசதி முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் படித்து பட்டம் பெற்றுவிட்டு அரசாங்க தொழிலை மாத்திரம் எதிர்பாரத்திருக்கும் மனநிலை இளம்சமுதாயத்திடமிருந்து மாறவேண்டும். அவர்கள் சிறு கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டு தங்களையும், தாங்கள் சார்திருப்போரையும், நாட்டையும் பொருளாதார ரீதியாக உயர்த்திட முன்வரவேண்டும். பிரபல தொழிலதிபர்களாக விளங்குபவர்கள் பெரும்பாலும் ஒரு சிறிய தொழிலை ஆரம்பித்து முன்னேறியவர்களே. இக்கடன் வசதியினைப் பெற்றுக் கொள்பவர்கள் தமது தொழிலுக்காக மாத்திரம் அதனைப் பயன்படுத்தி தொழில் விருத்தியடையச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோதின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்காசோலை வழங்கும் நிகழ்வில் ஹட்டன் நெசனல் வங்கி முகாமையாளர் ஏ. நிர்மல குமார், தோடர்பாடல் முகாமையாளர்களான எம். ரவீந்திரன், ஆர். கோபினாத், எம். ஜயமோகன், சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் நிதி மற்றும் துணைச் சேவைப் பகுதிக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் கே. தாரணி, சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.