4 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

அமெரிக்காவிற்கு 4 நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, ஐநா சபையில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை வகிக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் 20 ஆம் தேதி புறப்படும் பிரதமர், 21 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு, 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து, அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு தரப்பு உறவு தொடர்பாக கலந்துரையாடுகிறார்.
மேலும், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக அன்றைய தினம் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்க உள்ளனர். இதன் தொர்ச்சியாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனிடையே, அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோர் இணைந்து அளிக்கும் மதிய விருந்திலும் பங்கேற்க உள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாட உள்ளார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க வாழ் இந்தியர்களையும் பிரதமர் சந்தித்துப் பேச உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே அதிநவீன தொழில்நுட்பம் உள்ள ‘எம்.க்யூ., – 9 பிரிடேட்டர்’ எனப்படும் ‘ட்ரோன்’களை 24,000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து வாங்க, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு, எகிப்து அதிபர், முக்கிய பிரமுகர்கள், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.