40க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரித்து பிளாக்மெயில்.. போக்சோவில் இளைஞர் கைது
40க்கும் மேற்பட்ட சிறுமிகளை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் ராஜஸ்தான் காவல்துறை கைது செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் முகேஷ் குமார். டிரம்ஸ் இசை கலைஞரான இவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கச்சேரி நடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தனது சுற்றுப்புற கிராமங்களில் நடக்கும் விழாக்களுக்கு இவர் செல்லும் போது அங்குள்ள இளம்பெண்கள் குறிப்பாக சிறார்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொள்வார்.
பின்னர் சாட்டிங் மூலம் அவர்களிடம் பேசி, பின்னர் வீடியோ கால் வரை சென்று ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் இவற்றை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார் முகேஷ். பின்னர் அந்த பெண்கள் மற்றும் சிறுமிக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து வைத்து அவற்றை இணையத்தில் பரப்பியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிக்களிடம் இதை கூறி பிளாக்மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ளார். இவ்வாறு சுற்றியுள்ள 6 கிராமங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகளிடம் இந்த அபாச செயலை இவர் செய்துள்ளார். கடந்த இரண்டு மாத காலமாக சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சிறுமிகளின் ஆபாச படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், இந்த நபர் மீது புகார் எழத் தொடங்கியது.
ஜூன் 6ஆம் தேதி அன்று சம்தாரி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் முகேஷ் குமாரை கைது செய்த காவல்துறை அந்த நபரின் செல்போன் மற்றும் பென் டிரைவ் போன்றவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்தது. அதில் ஆபாச படங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து முகேஷ் குமார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. இவரது தொல்லையில் ஒரு சிறுமியும், அவரது தாயாரும் தற்கொலை செய்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.