546 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம்.
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்தது. ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணியின் நிஜத் மசூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 146 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணியின் எபாடொத் ஹொசனை் 4 விக்கெட் வீழ்த்தினார். 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 2-வது இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு வீரர் மொமினுல் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் சேர்த்தார்.
ஒட்டுமொத்தமாக வங்காளதேச அணி 661 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும். கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்கை தொடங்கியது.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 115 சுருண்டது. இதனால் 546 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்கில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார். இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஷான்டோ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.