வடக்கு கல்விப் பணிப்பாளரால் எனக்கு உயிர் அச்சுறுத்தல்! – வலயக் கல்விப் பணிப்பாளர் முறைப்பாடு.
வடக்கு மாகாண பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் எனக்கு உயிரச்சுறுத்தலையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் விதமாக செயற்படுகின்றார் என கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன், வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சில வருடங்களின் முன்னர் கிளிநொச்சி வலய க்கல்விப்பணிமனையின் கட்டடத்தை அண்மையில் சொகுசு பேருந்து ஒன்று மோதியதில், 7 இலட்சம் ரூபாவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான இழப்பீட்டை பேருந்தின் காப்புறுதி நிறுவனம் ஊடாக பெற்று வழங்கியிருக்க வேண்டும். சொகுசுப் பேருந்து உரிமையாளர் சேதத்துக்கான பெறுமதியை வழங்கியிருக்கவில்லை. அரச நிதியில் அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்தபோது, கிளிநொச்சி தெற்கு கல்வி வலயப் பணிப்பாளராகச் செயற்பட்டவர், திருஞானம் ஜோன் குயின்ரஸ். அவர் இப்போது வடமாகாண பதில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.
விபத்து தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தற்போதைய வலயக்கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன் முன்னிலையாகியிருந்தார். காப்புறுதி நிறுவனப் பணம் கிடைக்கவில்லையென மன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முன்னிலையாகிய பின்னர், வடக்கு மாகாணப் பதில் கல்விப்பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தன்னை அச்சுறுத்துவதாகவும், அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாகவும், சுயவிவரக் கோவையில் ஆவணங்களைச் சேதம் செய்தல், பதவி உயர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் முறையிட்டுள்ளார்.
அத்துடன், விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதி, வலயக் கல்விப் பணிமனைக்கு வந்து, வாகன உரிமையாளர் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபா பெற்றதாகவும், ‘உண்மையில் உங்களுக்கு விபத்து நட்டஈடு கிடைக்கவில்லையா?’ என வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘நீர் ஏன் நீதிமன்றம் சென்றீர்?’, ‘உம்மை யார் நீதிமன்றம் போகச் சொன்னது?’ எனப் பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் கேள்வியெழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு கிடைத்ததை உறுதிப்படுத்திய கல்வி அமைச்சின் செயலர் உமாமகேஸ்வரன், பதில் கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.