மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துங்கள்! – இலங்கைக்கு ஐ.நா. மீண்டும் அழுத்தம்.
வலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்பு என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அந்தக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.
இந்த மீளாய்வின் போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.