ஒரு ரூபாய் பிரியாணிக்காக குவிந்த மக்கள்…!
ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்க வந்தவர்களின் வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள எம்பயர் ஹோட்டலில் நேற்று ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒரு ரூபாய் தாளாக கொடுத்தால் மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்ற நிபந்தனையும் விரிக்கப்பட்டிருந்தது.
ஒரு ரூபாய் தாளை கண்ணால் கூட பார்க்க இயலாத நிலை சூழல் நிலவும் இந்த காலத்தில் கூட ஏராளமானோர் பிரியாணி வாங்குவதற்காக ஒரு ரூபாய் தாளுடன் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பிரியாணி விற்பனை துவங்கி பத்து நிமிடத்திலேயே தயார் செய்யப்பட்ட 800 பிரியாணிகளும் விற்று தீர்ந்து விட்டதாக கடை உரிமையாளர் அறிவித்தார். இதனால் பிரியாணி வாங்குவதற்காக குவிந்த ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் பிரியாணி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த பொதுமக்கள் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி இருப்பதை பார்த்து அவற்றுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதனால் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று வந்தவர்கள் 500 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.