30 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இரட்டைக் கொலையை போதையில் உளறிய நபர்..!

30 வருடங்களுக்கு முன்னாள் செய்த கொலையில் இருந்து தப்பிய நபர் மது போதையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதான சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விக்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ் பவார். 49 வயதான இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலை குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு காரணமும் அவர் தான் என்பதே ஹைலைட். 1993ஆம் ஆண்டு காலத்தில் அவினாஷ் லோனாவாலா பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்த தன்ராஜ் மற்றும் தனலட்சுமி என்ற தம்பதிக்கும் இவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவினாஷ் பவார் 19 வயது இளைஞராக இருந்த நிலையில், தங்கள் பணத்தேவைக்காக கடைக்காரரான தன்ராஜ் வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்தார்.

அதன்படி, 1993 அக்டோபர் 4ஆம் தேதி அவினாஷும் அவரது இரு கூட்டாளிகளும் தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது மனைவி தனலட்சுமியையும் கொலை செய்து, வீட்டில் இருந்த பணத்தையும் நகைகளையும் கொள்ளை அடித்து தப்பியோடினர். திருடியதை பிரித்துக்கொண்டு ஊரில் இருந்து ஓடிய அவினாஷ் முதலில் சீரடிக்கு சென்று இரண்டு நாள்கள் தங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து டெல்லி சென்று ஓராண்டு பணியாற்றிய அவர், அங்கிருந்து தானே வந்துள்ளார். பின்னர் அகமதுநகருக்கு குடிபெயர்ந்த அவர் பிரமிளா என்ற பெண்ணை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து மும்பை விக்ரோலி பகுதியில் செட்டில் ஆகியுள்ளார். இந்த காலகட்டத்தில் தான் தனது அடையாளம் வெளிப்படக்கூடாது என்பதற்காக அவினாஷ் என்ற பெயரை அமித் என்றும் மாற்றியுள்ளார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டிருந்த அவினாஷ் போதையில் தான் கொலை செய்த உண்மையை உளறியுள்ளார். இந்த தகவல் மும்பை குற்றப் பிரிவு காவலர் தயா நாயக் கவனத்திற்கு சென்ற நிலையில் போலீசார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில் அவினாஷ் தனது வாக்குமூலத்தாலேயே சிக்கி கைதாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.