ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் வியட்நாம் ராணுவ மந்திரி சந்திப்பு.
வியட்நாம் நாட்டின் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தலைநகர் டெல்லியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, சீனாவின் ஆதிக்கம் மிகுந்த தென் சீனக் கடலின் நிலைமையை மறுபரிசீலனை செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.