வலிகாமம் வடக்கில் காணி அளவீடு தேவையற்றது! – சுவீகரிக்கும் வர்த்தமானியை உடன் மீளப்பெறுமாறு சுமந்திரன் வலியுறுத்து.
“யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது. அந்தக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக முழுமையாக மீளப்பெறவேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் செய்ததைப் போன்று வலிகாமம் வடக்கிலும் செய்ய வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.
வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காணிகளில் சில பகுதிகள் நல்லாட்சி அரசின் காலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தன. விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்து அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏதுவாக அளவீட்டுப் பணிகள் வலிகாமம் வடக்கில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகின.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சந்திப்புக்களில் இந்த விடயம் தொடர்பில் பேசியிருக்கின்றோம். வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணிகளையும் சுவீகரித்து வெளியிட்ட வர்த்தமானியே தவறு. அனைத்துக் காணிகளையும் ஒரே வர்த்தமானியில் சுவீகரிக்க முடியாது. அந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
சம்பூரில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய வர்த்தமானியை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரே வர்த்தமானியில் மீளப்பெற்றார். அதைப்போன்று வலிகாமம் வடக்கிலும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதனை ஏற்றுக்கொண்டார். அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு காணி அமைச்சை அறிவுறுத்தியிருந்தார்.
அவர்கள் அவ்வாறு செய்யாமல் விடுவிக்கப்பட்ட காணிகளை மாத்திரம் அளவீடு செய்து அவற்றை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் கூட இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அந்த வர்த்தமானியை மீளப்பெறுவது பற்றி பரிசீலிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.
இவை எல்லாவற்றையும் விடுத்து விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்து அதனை மாத்திரம் வர்த்தமானியில் பிரசுரிப்பதை ஏற்க முடியாது. தவறான வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும்.” – என்றார்.