இலங்கை சென்ற பாக். போர்க் கப்பல்.
இந்தியாவிற்கு சொந்தமான ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல், இலங்கைக்கு பயணம் செய்வதற்கு ஒரு நாளிற்கு முன்பாக, பாகிஸ்தானிற்கு சொந்தமான போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பீ.என்.எஸ்.திப்பு சுல்தான் என்ற கப்பலே, அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு சொந்தமான, இந்த போர் கப்பலானது, 134.1 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 168 வீரர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் கட்டளை தளபதியாக கேப்டன் ஜவாட் ஹூசேன் செயற்பட்டு வருகின்றார்.
பாகிஸ்தான் போர் கப்பல், இன்று நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படையினருக்கு இடையில் பயிற்சிகள் நடந்துள்ளன.
இலங்கைக்கு ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எந்தவித சந்திப்புகளையும் நடத்தவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இரு நாட்டு கடற்படையினரும் வெவ்வேறாக இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கை, பிராந்திய ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் அனைத்து நாட்டு கடற்படையினருடனும் நெருங்கிய தொடர்புகளை ஒரே விதத்தில் பேணி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதனாலேயே, அனைத்து நாட்டு கடற்படையினரும் இலங்கைக்கு ஒரே விதத்தில் பயணம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்திய கடற்படையினரும், பாகிஸ்தான் கடற்படையினரும் பிராந்திய எல்லை பாதுகாப்புக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதனாலேயே, இரு நாட்டு கடற்படையினரும் ஒரே நேரத்தில் வருகை தந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.