த.வி.கூ உப தலைவர் அரவிந்தன் தானாக பதவிவிலக வேண்டும்- ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ச.அரவிந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உப தலைவர் என தன்னைத்தானே கூறிக்கொண்டு அரவிந்தன் திரிகின்றார். சிரேஸ்ட உப தலைவர் என பாவிக்க வேண்டாம் என அவரிடம் பலமுறை கூறியிருந்தேன். ஆனால் அவர் கணக்கில் எடுக்காது தொடர்ந்தும் சிரேஸ்ட உப தலைவர் என பெயரைப் பாவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் அரவிந்தன், என்னுடைய ஜென்ம எதிராகிய மாவை சேனாதிராஜாவின் மகனாகிய கலையமுதனுடன் எமது அலுவலகத்தில் வைத்து இரகசிய சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படியானவரின் மகனுடன் இரகசிய சந்திப்பு நடத்த வேண்டிய தேவை ஏன் அவருக்கு உருவாகியது? நான் இல்லாத நேரத்தில் எனது அறையினை திறந்து இந்த இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியை என்னுடைய சொந்த நிதியில் வளர்த்துள்ளேன். என்னுடைய சொந்த நிதியிலேயே நாச்சிமார் கோவில் கட்டிடம் வாங்கினேன்.தேர்தல் செலவுகளுக்காக கட்சி அலுவலகக் காணியை ஈடுவைப்பது தொடர்பிலும் அரவிந்தன் என்னுடன் கலந்துரையாடினார். அப்படியானவரிடம் கட்சி பொறுப்புக்களை கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிடும்.
இலண்டனில் இருந்து வந்தவுடன் கட்சித் தலைமையை ஒப்படைக்க நாங்கள் இங்கு கருவாட்டுக் கடை நடத்தவில்லை. மூன்று வருடங்களில் அரவிந்தனுக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கியிருப்பேன். ஆனால் இப்போது இவருடைய செயற்பாடுகள் பிழையாக உள்ளது.
இவரை கட்சியில் இருந்து வெளியேற்றி பிரபலப்படுத்த விரும்பவில்லை. அவர் தானாகவே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலக வேண்டும், என்றார்