நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலை பார்க்கப் போன பாகிஸ்தான் தொழிலதிபர் உயிர் பிழைப்பாரா?
ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் சிதைவுகளை நேரில் பார்க்கும் சுற்றுலா விபரீதத்தில் முடிந்திருப்பதே இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. நீர்மூழ்கி காணாமல் போய் 3 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அதற்கு என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவரவில்லை. நீருக்கடியில் சத்தம் எழுந்ததைக் கண்டுபிடித்துள்ள தேடுதல் குழுவினர், அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டைட்டானிக் சுற்றுலா, ஓஷன்கேட் நிறுவனம், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி, பயணம் எங்கே தொடங்கியது, அதில் பயணித்த 5 பேர், தேடுதல் வேட்டை, நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஆக்சிஜன் இருப்பு போன்ற விவரங்களின் தொகுப்பை சுருக்கமாக பார்க்கலாம்.
காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.
பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் உள்ளுடு தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.
ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.