கோயம்பேடு மார்க்கெட்டில் 2 நாளில் 100 டன் மாம்பழம் குப்பையில் வீச்சு.

மாம்பழம் சீசன் காரணமாக கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு சேலம், திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 500 டன் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. சில்லரை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலர் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்வதால் மாம்பழம் விற்பனை சூடு பிடித்து விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழை காரணமாக பழ மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்தது. இதனால் மாம்பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் சுமார் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் தேங்கி அழுகின. அதனை வியாபாரிகள் குப்பையில் கொட்டினர். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக மாம்பழம் விலை சற்று அதிகரித்து உள்ளது. பங்கனப்பள்ளி ஒரு கிலோ ரூ.50-க்கும், ருமானி ரூ.30, இமாம்பசந்த்-ரூ.120, ஜவாரி-ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.