மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஆசிரியர் பலி – ஏழு வயது மகள் படுகாயம்.
மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகளைக் கொலன்னாவையில் இருந்து குப்பியவத்தை நோக்கி பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது கொலன்னாவ ரஜமகா விகாரைக்கு அருகில் பயணித்த பஸ் திடீரென இடப்புறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிள் அதில் சிக்கி சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஏழு வயதுடைய பாடசாலை மாணவி படுகாயமடைந்து கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து அங்கிருந்த பிரதேசவாசிகள் பஸ் சாரதியையும் பஸ்ஸையும் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர்.
தாக்குதலுக்குள்ளான சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் பஸ் பாதுகாப்பு கருதி முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.