‘பட்டினிச் சாவு’ அரசியல் சூழ்ச்சியைச் தோற்கடித்தார் ரணில்! – அமரவீர தெரிவிப்பு.
வயல் நிலத்திலிருந்து போராட்டக் களத்துக்குச் சென்ற விவசாயி மீண்டும் வயலுக்குத் திரும்பி தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பு செய்கின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில அரசியல் தலைவர்களே விவசாயிகளை ஆர்ப்பாட்டக் களத்திற்கு இழுத்தார்கள் என்பது இரகசியமல்ல.
விவசாயிகளை விவசாய செயற்பாடுகளிலிருந்து விடுபடச் செய்து மக்களையும் பசியில் வாடச் செய்யும் அரசியல் சூழ்ச்சி செயற்பாடுகளையும் சிலர் முன்னெடுத்தனர். அந்த சவால்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு சாதகமான முறையில் முகம்கொடுத்தது.
ஜனாதிபதியின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹெக்டெயார் ஒன்றில் பெற்றுக்கொள்ளக்கூடிய அறுவடையின் தொகையை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. சில விவசாயிகள் குறிப்பிட்ட பருவகாலங்களில் 11 ஆயிரம் கிலோவை அறுவடை செய்துள்ளதோடு மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்திச் செயற்பாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீடு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன்கீழ் இலங்கை மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய வலுவான திட்டமிடல் ஒன்றைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம். வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய விவசாய அமைச்சு ஒன்றை உருவாக்குவதே எமது நோக்கம்.
மேலும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முட்டை வியாபாரம் மற்றும் விவசாயம் தற்போது நல்ல நிலைக்கு வருகின்றது.
மக்கள் பட்டினியால் வாடுவதாக ஊடகங்கள் முன் கூறி மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் செயற்படுகின்றன. ஆனால், இலங்கையில் பசியால் யாரும் இறப்பதில்லை. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது இருந்த அரிசியின் விலைக்கும் தற்போது அரிசியின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இப்போது வெள்ளைப் பச்சரிசி ஒரு கிலோவை நீங்கள் 125 முதல் 130 ரூபாவுக்கு வாங்கலாம். கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவான விலைக்கு அரிசியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்போம். அதன்படி, கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்.
இவ்வாறு கொள்வனவு செய்வதற்கான போதிய நிதி திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என எமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறுபோக விளைச்சலை கொள்வனவு செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.” – என்றார்.