மழையால் சேறும் சகதியுமான சாலை: கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 பேர் பலி.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோக்ரா அருகே உள்ள கோகிலா தேவி கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் இன்று சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரி பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 600 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் சேறும் சகதியுமாக இருந்ததால், வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.