இப்படியான வைத்தியபராமரிப்பை உலகில் எங்கும் காணவில்லை!: பனாமாக்கப்பல் மாலுமி எல்மோ
குளித்துவிட்டு வெளியேறும்போது பாரிய வெடிச்சத்தம் கேட்டது: இப்படியான வைத்தியபராமரிப்பை உலகில் எங்கும் காணவில்லை!
நான் ஒரு வெளிநாட்டவராக இருந்தும் இங்கு எனக்களிக்கப்பட்ட சிகிச்சை வைத்தியப்பராமரிப்பு என்பது வாழ்நாளில் மறக்கமுடியாது. இத்தகைய அன்புடன் அர்ப்பணிப்புடன்கூடிய பராமரிப்பை உலகில் எங்கும் நான் காணவில்லை. வைத்தியர்கள் நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு கடந்த ஆறுநாட்களாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சங்குமண்கண்டிக்கடலில் எரிந்துகொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பனாமாக்கப்பல் மாலுமி பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோ கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (4) கடற்படையினரால் மீட்கப்பட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3மணிநேர சத்திரசிகிச்சையை , சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
நேற்று(9)புதன்கிழமை இரவு 9மணியளவில் அவர் குணமாகி கொழும்புக்கு புறப்படும்வேளையில் கண்ணீர்மல்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனுபவத்தை இவ்வாறு விபரிக்கிறார் எல்மோ!
கப்பல்தீவிபத்து பற்றிய அனுபவத்தைக்கேட்டபோது அரைகுறை ஆங்கிலத்தில் இவ்வாறு பதிலளித்தார்.
‘எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப்பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.
அங்கு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். சுமார் 15நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களைமுடித்துவிட்டு குளித்தேன்.
குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத்தாக்குவதுபோன்று உணர்ந்தேன்.
கப்பலில் ஒருபகுதி எரிவதைக்கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை.
இருந்தும் இன்னும் நான் உயிர்வாழ்கிறேன்.
உண்மையில் இலங்கை மக்கள் இலங்கைகடற்படைவிமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை டாக்டர்கள் நர்சுகள் ஏனையோர் என்னைப் பராமரித்தவிதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றிகள்’ என்றார்.
மாலுமி எல்மோ வைக்கப்பட்டிருந்த
அதிதீவிரசிகிச்சைப்பிரிவில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் மற்றும் உணர்வகற்றல் வைத்தியநிபுணர் டாக்டர் ஏ.தேவகுமார் ஆகியோர் எல்மோவின் உடல்நிலையை சோதித்தவாறு நின்றிருந்தனர்.
உணர்வகற்றல் வைத்தியநிபுணர் டாக்டர் ஏ.தேவகுமார் கூறுகையில்:
கடந்த வெள்ளியன்று கொண்டுவரப்பட்ட மாலுமி எல்மோவிற்கு உடனடியாக 3மணிநேர சத்திரசிகிச்சைஅளிக்கப்பட்டது.தொடர்ந்து அதிதிவீரசிகிச்சைப்பிரிவில் அதிகவனத்துடன் அவரை பராமரித்துவந்தோம்.
எதிர்பார்த்ததைவிட தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார். இதயம் நன்றாக வேலைசெய்கிறது. ஓரளவுசாப்பிடுகிறார். நன்றாக கதைக்கிறார். அவர் 5தினங்களுள் இவ்வாறு தேறுவார் என எதிர்பார்க்கவில்லை. எனினும் இன்று அவர் ஆரோக்கியத்துடன் சுகதேகியாக வெளியேறுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். என்றார்.