நடராஜன் மாதிரி நானும் நிறைய கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவேன்- நடிகர் யோகிபாபு உறுதி.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.