கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கூரிய ஆயுதத்தால் அவரைச் சராமரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அயலவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கல் – வாங்கல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்துக் கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.