ஐ.தே.க. பக்கம் சாயும் எம்.பிக்களைத் தடுக்க ‘மொட்டு’ வியூகம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்களைத் தம்வசம் வைத்துக்கொள்வதற்கு மொட்டுக் கட்சி தயாராகி வருகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்க வேண்டும் என மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளர் என மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் அறிவித்து வருகின்றனர். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி 30 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாகச் செயற்படும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பக்கமும் குழுவொன்று சென்றுவிட்டால் அடுத்த தேர்தலில் அது தாக்கமாக அமையும் என்பதாலேயே கட்சியின் பலத்தைக் காக்க மொட்டுக் கட்சி தற்போது வியூகம் வகுத்து வருகின்றது.