கர்நாடகாவில் வினோதம்; மழை வேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்.

கர்நாடகாவில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக கிராமவாசிகள்
2 சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நடைபெற்றுள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்து உள்ளனர்.
இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இதன்பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர். இதுபற்றி உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனமடைந்து உள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.