அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் கல்யாணம்…தெலுங்கானாவில் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சி

கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகள் எப்போதுமே இயற்கை மீது பெரிதும் மரியாதை வைத்திருப்பார்கள். அதற்கு காரணம் இயற்கையை அவர்கள் புனிதமானதாகவும், அள்ளிக் கொடுக்கும் கடவுளின் வரமாகவும் பார்க்கிறார்கள். தங்கள் பயிர்கள் அதிக விளைச்சலை தர வேண்டும் என்பதற்காக பல்வேறு சடங்குகள், பூஜைகளை செய்கிறார்கள். இதேபோன்ற ஒரு பாரம்பரிய நிகழ்ச்சிதான் எருவாகா புன்னமி திருவிழா. இந்த நிகழ்ச்சியில் விவசாயக் கருவிகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்குள்ள வாதுமை மரத்தில் படையல் போடுகிறார்கள்.
இந்த நடைமுறைகளை தொடர்ந்து பல பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. முக்கியமாக ஊர் கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இவ்வழக்கம் காலம் காலமாக இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட, வனர்பதி மாவட்டத்திலுள்ள கோத்தபெட் பஞ்சாயத்தில் இருக்கும் திண்டி கிராமத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இக்கிராமத்தில் உள்ள ராமுலு என்பவரின் தோட்டத்தில் இருக்கும் இரு மாமரங்களுக்கு ஊர் மக்கள் கூடி திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
ஏதோ மரத்திற்கு இடையே நடக்கும் திருமணம் என நாம் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. நம்முடைய திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவோமோ அதேப்போல் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளம் கொட்ட, மிகப்பெரிய விருந்தோடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தன்னுடைய வாழ்வாதாரம் மற்றும் செல்வ செழிப்பிற்கு காரணமாக இருக்கும் இந்த மாமரத்திற்கு மரியாதை செலுத்தவும், அதன் பங்களிப்பை கொண்டாடவுமே இந்த திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் ராமுலு.
இந்த திருமணம் வெறும் எளிமையான நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மிகப்பெரிய திருவிழா போல் முடிவடைந்துள்ளது. மணமக்கள் போல் மரத்திற்கு ஆடை, அணிகலன்களும் எந்த குறையும் இல்லாமல் அலங்கரிக்கபட்டிருந்தது. மொத்தத்தில் இந்த திருமண நிகழ்ச்சி எல்லா சடங்கு சம்பிராதயங்களையும் முழுமையாக பின்பற்றி தத்ரூபமாக நடைபெற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் முடிந்ததை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வோதி பிய்யம் என்ற சடங்கை செய்தனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மூன்று ராமுலு சகோதரர்கள் ஒருங்கிணைத்தனர். இவர்களது நான்கு ஏக்கர் தோட்டத்தில் மொத்தம் 225 மாமரங்கள் உள்ளன. இந்த மாமரத்தில் விளைந்த பழத்தை அறுவடை செய்ய இவர்கள் வித்தியாசமான முறையை கையாள்கிறார்கள். அதாவது மாமரங்களுக்கு இடையே வெற்றிகரமாக திருமணம் செய்து வைத்த பிறகே பழங்களை அறுவடை செய்கிறார்கள்.
வேத மந்திரங்கள் ஒலிக்க, பூசாரிகள் முன்னிலையில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மற்ற பாரம்பரிய சடங்கு, சம்பிராதயங்களோடு தாலி கட்டும் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடந்தது. இந்த திருமணத்தை ஒட்டி பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது. மேலும், திருமணம் முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.