மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்: சட்டப்போராட்டம் தொடரும் என அறிவிப்பு!
இனி சாலைகளில் போராட மாட்டோம் என்றும் நீதிமன்ற போராட்டத்தை தொடர்வோம் என்றும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது.
இதனிடையே, பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், சத்யவா்த் காடியான், பஜ்ரங் புனியா, ஜிதேந்தா் கின்ஹா உள்ளிட்ட மல்யுத்த வீரா்-வீராங்கனைகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணியாக சென்றபோது அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, தில்லியில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோருடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கடந்த 7-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஜூன் 15-க்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்ற மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக மல்யுத்த வீரா்-வீராங்கனைகள் அறிவித்தனா்.
தொடர்ந்து, பிரஜ் பூஷண் மீது தில்லி காவல்துறையினர் கடந்த 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தல் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதால் சாலைகளில் ஈடுபடும் போராட்டத்தை கைவிடுவதாகவும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து ஈடுபடுவோம் என்றும் மூத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.