பொத்துவிலில் ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் – அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றனர்.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப் பயணிகளின் நீர்ச் சறுக்கல் படகுகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஓட்டோ சாரதிகள் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று ஓட்டோ உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனாலேயே போக்குவரத்துப் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ச் சறுக்கல் படகுத் தாங்கிகளை அகற்றி வீதி விபத்துக்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் பாதுகாத்து தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு செல்வதற்குப் பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிய மகஜர் ஒன்றையும் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.