மணிப்பூரில் ராகுல் காந்தி வாகனம் தடுத்து நிறுத்தம்!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரஸின் விமா்சனமாகும்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டு ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோரை சந்திக்க ராகுல் காந்தி சென்றபோது பிஷ்ணுபூர் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சாலையின் இருபுறமும் ராகுல் காந்தியை காண மக்கள் குவிந்துள்ள நிலையில், எங்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் தெரியவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.