தமிழகத்திற்கு புதிய தலைமை செயலாளர் நியமனம்
தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட நாளில், தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
யார் இந்த சிவ்தாஸ் மீனா?
ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு அறிந்த சிவ்தாஸ் மீனா, காஞ்சிபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கியவர்.
தொடர்ந்து கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.