கோவாவில் இருந்து ஆந்திரா வரை ரயிலில் பயணம் செய்த 3 பெண்கள்….2949 மதுபாட்டில்களுடன் கைது!

கோவாவில் இருந்து ஆந்திரா வரை ரயிலில் பயணம் செய்த 3 பெண்கள் 2949 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் கைகளூர் ரயில் நிலையத்தில் மூன்று பெண்கள் 24 கை பைகளுடன் இறங்கி காத்திருப்பது குறித்து கைகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ரயில் நிலையத்திற்கு சென்று அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்தனர். இதனை அடுத்து அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளை ஆய்வு செய்த போது அவற்றில் கோவா மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக மூன்று பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது மும்பையில் இருந்து காரைக்கால் செல்லும் எல் டி டி ரயிலில் அவர்கள் கோவாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் கோவாவில் இருந்து ராஜமுந்திரி வரை செல்லா அவர்கள் டிக்கெட் எடுத்திருந்த நிலையில் பெரிய ரயில் நிலையம் ஆன ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் இறங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிறிய ரயில் நிலையமான கைகளூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல இருந்ததாக தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 2949 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 4 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.