விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன் தீவிர சிகிச்சை பிரிவில் : பாரிய பாதிப்பு இல்லை (படங்கள்)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை முந்தல் பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தில் சிக்கி சிலாபம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமதி மகேஸ்வரன் இன்று (29) காலை புத்தளம்-கொழும்பு வீதியில் முந்தலுக்கு அருகே உள்ள , மங்கலேலிய பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வேன் சென்று கொண்டிருந்ததுடன் , இன்று அதிகாலை 5.50 மணியளவில் வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்த 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் , மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கடுமையாக இல்லை என வைத்தியசாலையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேனின் சாரதி மற்றும் மற்றொரு பயணி சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இலங்கை தமிழ் அரசியல்வாதி ஆவார். யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராகவும், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் அவர் தனது நாடாளுமன்றத் தொகுதியை இழந்தார்.