மணிப்பூா் கிராமத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஆயுதமேந்திய கலவரக்காரா்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், காங்போக்பி மாவட்டத்தின் ஹராவதேல் கிராமத்தில் அடையாளம் தெரியாத கலவரக்காரா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு ராணுவத்தினா் விரைந்தனா். அப்போது, ராணுவத்தினரை நோக்கி கலவரக்காரா்கள் துப்பாக்கியால் சுட்டனா். ராணுவத்தினரும் உரிய முறையில் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, நிலைமையைச் சமாளிப்பதற்கு அப்பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன.
கிராமத்தில் கலவரக்காரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றும் இரவு 10 மணியளவில் கும்பல் கலைந்து சென்றது, கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் கூடுதல் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்று ராணுவம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதி, தலைநகா் இம்பாலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே நடைபெற்ற மோதல் வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் பலியாகி உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி சுராசந்த்பூரில் மெழுகுவர்த்தி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவிகிதமான மைதேயி சமூகத்தினர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியிலும், 40 சதவிகித பழங்குடியினர், நாகர்கள் மற்றும் குகி பழங்குடியினா் மலை மாவட்டங்களில் வாழ்கின்றனர்.