கனத்த இதயத்தோடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை: குஜராத் நீதிபதி தீர்ப்பு
போக்சோ சட்டத்தின் கீழ், பலாத்காரம் செய்ததாக இளைருக்கு குஜராத் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பெண்ணின் சம்மதத்தோடு, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த விவகாரத்தில், பெண் வீட்டை விட்டு வெளியேறியபோது 17 வயதே ஆகியிருந்ததால், சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தபோய் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு மிகக் கனத்த இதயத்தோடுதான் தண்டனை விதிக்கப்படுகிறது, உயர்நீதிமன்றத்தைப் போல, சட்டத்தைத் தாண்டி குற்றவாளியை விடுதலை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சைலேஷ் வசவாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் சம்மதத்தோடுதான் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதனால், குற்றவாளிக்கு தண்டனை வழங்கக் கூடாது. ஆனாலும் போக்சோ சட்டப்படி, தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விவரம்.. 2013ஆம் ஆண்டு 17 வயது சிறுமியும், வசவாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மகளை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விட்டதாக தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, இருவருக்கும் முதல் குழந்தை பிறந்த பிறகு, கிராமத்துக்கு திரும்பியிருக்கிறார்கள். அப்போது வசவாவை காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். பிணையில் விடுதலையான பிறகும்,கிராமத்துக்கு வந்து, அந்தச் சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அபபோது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், தற்போது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியாக இருந்த போது அவருடன் பாலியல் உறவு வைத்திருந்தக் குற்றத்துக்காக வசவாவுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு சிறுமியின் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
ஆனால், தற்போது கணவரும் குழந்தைகளும் வேண்டாம் என்று குடும்ப உறவிலிருந்து சிறுமி வெளியேறிவிட்டதால், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வசவாவுக்கே வந்துவிட்டதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வசவா தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
ஆனால், போக்சோ சட்டப்படி வசவாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கனத்த இதயத்தோடு வழங்கப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றவாளிக்கு தண்டனை வழங்கினால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நீதிமன்றம் நன்கு அறிந்தே இருக்கிறது. ஆனால் கைகள் கட்டப்பட்டுள்ளதே என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை, அவர்களது குழந்தைகளுக்கு வழங்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.