அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.
ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அயர்லாந்து, அமெரிக்கா, நேபாளம், யுஏஇ அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணிகள் 7 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இறங்கின.
இதில் 7-வது இடத்துக்கான போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்வதற்கான முதல் அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து, அமெரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 42.4 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சைதேஜா முக்கமல்லா 55 ரன்னிலும், மொடோனி 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெய்லர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 34.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று 7-வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
பால் ஸ்டிர்லிங் அரை சதம் அடித்து 58 ரன்கள் எடுத்தார். பால்பிரின் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரெய்க் யங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.