டயர் வெடித்த வினாடியில்.. எரிந்த பேருந்திலிருந்து தப்பிய பயணியின் அனுபவம்

மகாராஷ்டிரத்தில், டயர் வெடித்த அந்த நொடியில் பேருந்தில் தீ பரவியதாக எரிந்துகொண்டிருந்த பேருந்திலிருந்து தப்பியவர் பயங்கர அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். 8 பேர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு தப்பினர்.

இந்த பயங்கர விபத்திலிருந்து தப்பிய பயணிகள் கூறுகையில், பேருந்து சென்றுகொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்தச் சப்தம் கேட்டது. அந்த நொடியில், பேருந்து முழுவதும் தீ பரவியது. பேருந்து முழுவதும் ஒரு வினாடி கூட தாமதமில்லாமல், தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது என்று தெரிவித்துள்ளார் ஒரு பயணி.

மேலும், நானும், எனது அருகில் இருந்தவர்களும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினோம். ஆனால் அனைவராலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. விபத்து நேரிட்ட சில நிமிடங்களில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது என்கிறார்கள்.

அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஒரு சிலர் மட்டுமே ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்துத் தப்பினர். மற்றவர்களால் வெளியே வர முடியவில்லை. உயிரோடு பலரும் எரிவதை கண்கூடாகப் பார்த்தோம். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கண்ணீர்மட்டுமே விட்டோம் என்கிறார்கள்.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், அவ்வழியாகச் சென்ற வாகனங்களை கையசைத்து உதவி கேட்டும், ஒரு வாகனம் கூட நிற்கவில்லை என்று கதறுகிறார்கள்.

விபத்தில் தீக்காயங்களுடன் தப்பியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 3 குழந்தைகளும் அடக்கம், விபத்துக்குள்ளான பேருந்து மகாராஷ்டிரத்தின் யவத்மாலில் இருந்து புனேவுக்குச் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.