உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக சு.க. போர்க்கொடி!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பில் தற்சமயம் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறுகின்றது. இந்தநிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு தமது கட்சி வாக்களிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம்’ என்ற தலைப்பில் அரசு இந்த யோசனையை இன்று முற்பகல் சபையில் சமர்ப்பித்தது.
இரவு 7.30 வரையில், இந்த யோசனையை விவாதத்துக்குட்படுத்தி, அதன்பின்னர், வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, இந்த யோசனையைச் சமர்ப்பித்தபோது, சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்ட யோசனைக்குப் பதிலாக வேறு யோசனை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சபையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இதையடுத்து சபை முதல்வரால் ‘உள்நாட்டு அரச படுகடன் மறுசீரமைப்புக்கான விரிவான முறைமையை நடைமுறைப்படுத்தல்’ என்றவாறு அந்த யோசனை திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர், விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.