சென்னை – திருப்பதிக்கு விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை…!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில் சேவைகளை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அரசு தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறது. அதன்படி தற்போது நாடு முழுவதும் 23 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை சென்டரல்- மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு வழித்தடத்தில் விரைவில் மற்றுமொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சென்னை சென்டரல்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையானது இம்மாதமே தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஜூலையில் கோரக்பூர் – லக்னோ, ஜோத்பூர்-சபர்மதி மற்றும் சென்னை – திருப்பதி ஆகிய 3 புதிய தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தப் பின்னர் அட்டவணை, கட்டணம், வழித்தடங்கள் உள்ளிட்டவற்றின் முழு விவரங்கள் வெளியாகும்.
நாட்டின் முன்னணி ஆன்மீக தலமாக திருப்பதி உள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்தும் திருப்பதிக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பதி தரிசனத்திற்காக செல்கின்றனர். எனவே, சென்னை திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள இந்த வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ரயில்வே எதிர்பார்க்கிறது.