2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்த களமிறங்கிய இங்கிலாந்து தரப்பில் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிரடியாக விளையாடிய டக்கெட் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, பேர்ஸ்டோவ் அவுட் முறையில் அவுட்டானார். ஆனால், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 155 ரன்களை குவித்தார்.
அடுத்து களமிறங்கிய பிராட் 11 ரன்களிலும், ராபின்சன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது. இதனால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.