பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் தில்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி இங்குதான் தங்கி தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ள பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென ஆளில்லா விமானம் (டிரோன்கள்) பறந்ததாக கூறப்படுகிறது. பிரதமர் இல்லம் உள்ள பகுதியில் டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து டிரோன் பறந்தது தொடர்பாக, பிரதமருக்கு பாதுகாப்பை வழங்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழு, காவல்துறையை அணுகி தகவல் தெரிவித்தது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
டிரோனைக் கண்காணிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளால் சந்தேகத்திற்குரிய வகையில் பறந்ததாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் இல்லத்திற்கு அருகே, திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாக பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, எங்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.
இதனையடுத்து பிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனால், இதுவரை சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோதும், அவர்களும் பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் மாதிரியான பொருள் எதையும் அவர்களாலும் கண்டறிய முடியவில்லை என தெரிவித்துள்ளது.
எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.