ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் – ரயில்வே பாதுகாப்பு ஆணையம்
ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே சென்ற சில நிமிடங்களில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதியது. இதில் கடுமையாக சேதமடைந்த ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கவிழ்ந்தன. அருகில் உள்ள தண்டவாளங்களிலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் பெட்டிகள் கவிழ்ந்தன.
விபத்து நடந்த போது, அதற்கு எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகள் மீது, கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் மோதின. உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விபத்தில் 293 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்தில் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்காது என தெரிவித்துள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தொழில் நுட்ப கோளாறு மற்றும் இயந்திர கோளாறுக்கான சாத்தியங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சிக்னல் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் தவறால் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றம் செய்த பிறகும், கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றும், அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிக்னல் துறை மட்டுமின்றி, பிறரும் இச்சம்பவத்தில் அலட்சியத்துடன் நடந்துகொண்டது தெரிய வந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரயில் பயணிகள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.