அனில் அம்பானியின் மனைவி அமலாக்கத்துறை முன் ஆஜர்!

அந்நியச் செலாவணி வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவா் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார்.
சுவிஸ் வங்கி கணக்குகளில் ரூ.814 கோடியிலான கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டு சுமாா் ரூ.420 கோடி வரி கட்டாமல் ஏய்ப்பு செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு கடந்த மாா்ச் மாதம் மும்பை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேற்று(திங்கள்கிழமை) ஆஜரானார். அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி மும்பையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினா் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.