இலங்கையில் விபத்துக்களால் தினந்தோறும் 35 பேர் மரணம்!
“இலங்கையில் நாளொன்றுக்கு 32 முதல் 35 பேர் வரையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர். வாகன விபத்துக்கள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றன.”
இவ்வாறு தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர் விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்துக்கும் ஒருமுறை விபத்துக்கள் காரணமாக நான்கு பேர் வரையில் மரணிக்கின்றனர்.
விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
வருடமொன்றில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரையில் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். அதாவது நாளொன்றுக்கு 32 முதல் 35 பேர் வரையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர்.
வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றன. இது மிகவும் மோசமான நிலைமையாகும்.
எனவே, இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதே அவசியமாகும்.” – என்றார்.