இரண்டு மாதங்களுக்குப்பின் மணிப்பூரில் மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு!

மணிப்பூரில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட மாநில அரசின் இந்த முடிவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
ஜூலை 5 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கப்படும் என்று கடந்த திங்களன்று மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல் நாள் பள்ளி வருகையின்போது பல மாணவர்கள் இரண்டு மாதங்களில் கல்வி கற்க முடியாமல் இருந்தது தொடர்பாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், மணிப்பூரில் இணையம் தடைசெய்யப்பட்டதின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளும் செயல்பட இயலவில்லை. இதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.