யாழில் இராணுவம் வெளியேறிய காணியை மக்களிடம் ஒப்படைக்கப் பேச்சு! – அரச அதிபர் தகவல்.
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மேற்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
காங்கேசன்துறை சிமெந்து ஆலையுடன் இணைந்தாக இராணுவத்தினரின் ஆயுதக் கிடங்கு அமைந்திருந்தது. அதற்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 30 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த முகாமிலிருந்து கடந்த மாதம் 10ஆம் திகதி இராணுவத்தினர் வெளியேறினர்.
இந்தக் காணிகள் உரிமையாளர்களிடம் எப்போது ஒப்படைக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “அந்தக் காணிகளை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” – என்றார்.
இதேவேளை 2013ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிப்பதாக அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசு அறிவித்திருந்தது. பின்னர் நல்லாட்சி காலத்தில் அவற்றில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டன. இருப்பினும் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதனை வெளியிடும் நோக்குடன் விடுவிக்கப்பட்ட காணிகளை அளக்கும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு மஹிந்த அரசால் வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு வர்த்தமானி முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் அளவீட்டு நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் பதிலளித்த யாழ். மாவட்ட அரச அதிபர், “முன்னாயத்தப் பணிகள் மாத்திரம் நடக்கின்றன. கள அளவீட்டுப் பணிகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை. வெகுவிரைவில் ஆரம்பமாகும்.” – என்றார்.